திருச்சி: தமிழகத்தில் நடைபெறக்கூடிய தொல்லியல் ஆராய்ச்சிகளில் இனி ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகள் வரக் காத்திருக்கின்றன என முதல்வரின் முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘தமிழ் நெடுஞ்சாலை' நூல் அறிமுகவிழா ‘களம்’ இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.துளசிதாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக முதல்வரின் முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் நூலை அறிமுகம் செய்து பேசியதாவது:
அதிகாரத்தின் மிக உச்சத்தில் இருப்பவர்களிடமும் தனது கருத்தை தைரியமாக எடுத்துச்சொல்லும் ஆற்றல் படைத்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். நாட்டின் பேரிடர் மீட்புக்கு மிக முக்கிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர். குடிமைப் பணி மட்டுமின்றி சிந்துவெளி ஆராய்ச்சி, பானைத்தடம், இடப்பெயர்ச்சி, அகழாய்வு என தொடர்ச்சியாக தமிழ், தமிழ் மண் சார்ந்து வாழக்கூடியவர். இந்நூல் முழுவதும் அவரது கவித்துவமும், அனுபவமும் நிரம்பி வழிகின்றன. பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு இந்நூலில் ஏராளமான திருப்பங்கள் உள்ளன. இது, பல ஆயிரம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அதிகாரத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிவகளை பகுதியின் தொன்மையை பறைசாற்றும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் கடந்தமுறை கிடைத்தன. அதன் அடிப்படையில் கீழடி 2,600 ஆண்டுகள் பழமை என்றால், பொருநைநதி நாகரிகம் 3,700 ஆண்டுகள்பழமையானது என அறியப்பட்டது. இதை வைத்து, இனி இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து தொடங்கித்தான் எழுதப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் ஆராய்ச்சிகளில் ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகள் வரக் காத்திருக்கின்றன என்றார்.
நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றி பேசும்போது, “உலகின் மிகச்சிறந்த தமிழ் ஆவணகாப்பகமாக கருதப்படும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி மன்றத்தில் உள்ள 4.5 லட்சம் நூல்களை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர் தே.சங்கர சரவணன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன், எஸ்.ஆர்.வி பள்ளிகள் இணைச் செயலாளர் பி.சத்தியமூர்த்தி கலந்துகொண்டனர்.
முன்னதாக ‘களம்’ அமைப்பின் சார்பில் ரமேஷ்பாபு வரவேற்றார். வி.செல்வம் முன்னிலை வகித்தார். முடிவில் நெல்சன் ஆரோக்கியம் நன்றி கூறினார். இவ்விழாவை பிரபுகுமார், அமர்நாத், சுதா பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.