தமிழகம்

பாஜக - விசிக மோதல் விவகாரம்: 180 பேர் மீது போலீஸார் வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் கைகளால் தாக்கிக் கொண்டதுடன், கற்களாலும் தாக்கிக் கொண்டனர். இதில், இரு காவலர்கள் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இருதரப்பினரும் சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைசேர்ந்த 180-க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் கூடுதல், காயம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, சாலை மறியல் தொடர்பாகவும் தனித்தனியாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT