தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வேட்பாளராகும் எதிர்பார்ப்புடன் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 136 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து காத்திருந்தனர். அதில் சுமார் 30 விருப்ப மனுக்கள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள். மற்றவற்றில் சிலரை தேர்வு செய்து நேர்காணலுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர்.
அந்த வரிசையில், பென்னாகரம் தொகுதிக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுகம், வேலுமணி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் வேலுமணி வேட்பாளர் ஆகியுள்ளார். தருமபுரி தொகுதிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பு.தா.இளங்கோவன் தற்போது வேட்பாளர் ஆகியுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் கவுதமன், கடத்தூர் ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் குப்புசாமி வேட்பாளர் ஆகியுள்ளார். அரூர் தொகுதிக்கு பேரூராட்சி தலைவர் காவேரி, அரூர் ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் அழைக்கப்பட்ட நிலையில் முருகன் தற்போது வேட்பாளர் ஆகியுள்ளார்.
பாலக்கோடு தொகுதிக்கு மட்டும் யாரையுமே தலைமை நேர்காணலுக்கு அழைக்கவில்லை. அந்த தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் வேட்பாளர் ஆகியுள்ளார்.
இதற்கிடையில், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பனுக்கு இந்த முறை சீட் வழங்கப்பட மாட்டாது என்று மாவட்டத்தில் பெரும்பகுதி அதிமுக-வினர் பேசி வந்தனர். அது அப்படியே நடந்து விட பழனியப்பனின் நெருங்கிய வட்டத்தைத் தவிர மற்றவர்களுக்கு இது பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த சிலர் கூறியது:
அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் ஓரம் கட்டப்பட்ட அமைச்சர் பழனியப்பன், பல்வேறு விளக்கங்களை அளிக்க முயன்றும் தலைமை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இதுதவிர, மோளையானூர் ஊராட்சி தலைவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அமைச்சர் பழனியப்பனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தலைவர் பதவியை இழந்தார். அதைத்தொடர்ந்து அவர் பழனியப்பன் குறித்து பல்வேறு புகார்களை ஆதாரங்களுடன் தலைமைக்கு அனுப்பி வந்தார். இதுதவிர, வேறு வழிகளிலும் தலைமைக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஓரங்கட்டி வைத்ததுடன், தற்போது வேட்பாளர் வாய்ப்பையும் அளிக்கவில்லை.
இவ்வாறு கூறினர்.