திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்தும் அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் ரூ.22.64 கோடி மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன.
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட துரைமுருகன் நேற்று மனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவர் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் உள்ள விவரங்கள்:
துரைமுருகன் மீது கடந்த 2002 மற்றும் 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸா ரால் வருமானத்துக்கு அதிக மான சொத்து குவித்த இரண்டு வழக்கு நிலுவையில் உள்ளன. அதேபோல, காட்பாடி அடுத்துள்ள தாங்கல் பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சியரின் கார் மோதிய விபத்தில் கடந்த ஆண்டு இளைஞர் பலியானார். இந்த சம்பவத்தைக் கண்டித்து கார்ணாம்பட்டு ரயில்வே மேம் பாலம் மற்றும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் துரை முருகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத் தியதாக துரைமுருகன் மீது திருவலம், காட்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துரைமுருகன் வசமுள்ள ரொக்கம் கையிருப்பு ரூ.6.50 லட்சம். மனைவியிடம் ரூ.3.50 லட்சம் உள்ளது. துரைமுருகனிடம் 500 கிராம் தங்க நகைகள், 1 காரட் வைரம், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள். சாந்தகுமாரி வசம் 2,224 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளன.
வங்கிகளில் உள்ள ரொக்கம் இருப்பு, பங்கு முதலீடுகள் என அசையும் சொத்துகளாக துரைமுருகன் வசம் ரூ.57 லட்சத்து 8 ஆயிரத்து 425 உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 90 லட்சத்து 97 ஆயிரத்து 176 மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
துரைமுருகன் பெயரில் காவேரிப்பாக்கம், தாராபடவேடு, கொத்தமங்கலம், கண்டிப்பேடு, காங்குப்பம் உள்ளிட்ட பகுதியில் சந்தை மதிப்பில் ரூ.6 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரத்து 800 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி பெயரில் கண்டிப்பேடு, பெருவளையம், ஓச்சேரி, கீழகோட்டையூர், அடையாறு வீடு என சந்தை மதிப்பில் மொத்தம் ரூ.20 கோடியே 73 லட்சத்து 44 ஆயிரத்து 300 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன.
துரைமுருகன் பெயரில் எந்த வாகனமும் இல்லை. அவரது மனைவி பெயரில் மினி லாரி, மினி வேன் மட்டும் உள்ளன. துரைமுருகனுக்கு கடன் ஏதும் இல்லை.
துரைமுருகன் வசம் ரூ.7 கோடியே 14 லட்சத்து 39 ஆயிரத்து 225 மதிப்புள்ள அசையும் அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ.22 கோடியே 64 லட்சத்து 41 ஆயிரத்து 476 மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் உள்ளன.
2011 உறுதிமொழிப் பத்திரம்
கடந்த 2011 தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் அப்போது தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில் ரூ.3 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 63 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார். அதே காலக் கட்டத்தில் அவரது மனைவி பெயரில் ரூ.5 கோடியே 82 லட்சத்து 46 ஆயிரத்து 113 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையாத சொத்துகள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். அப்போது, துரைமுருகனுக்கு ரூ.1 கோடியே 85 லட்சத்து 36 ஆயிரத்து 27 கடன் இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் துரைமுருகனின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 162. அவரது மனைவி பெயரிலான சொத்து மதிப்பு ரூ.16 கோடியே 81 லட்சத்து 95 ஆயிரத்து 363 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.