தமிழகம்

திமுக ஊழலின் ஊற்றுக்கண்; அதிமுக உச்சக்கட்டம்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ், சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியுமான திராவிட கட்சிக்கு ஒரே மாற்று பாமக மட்டுமே. இவ்விரு கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி சேர மாட்டோம். எங்களின் கூட்டணி மீடியாக்களுடன் தான்.

தற்போது, சில மீடியாக்களில் கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் ஆளும் கட்சிக்கு சாதகமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்பு வெளியிடக் கூடாது என உத்தரவிட்டு இருந்தும், அதனை ஒரு சில மீடியாக்கள் மீறி வருகின்றன.

தர்மம் பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பத்திரிக்கை தர்மம் என்று தான் கூறுகிறோமே தவிர அரசியல் தர்மம் என்று கூறுவதில்லை. அரசியலுக்கு தர்மம் கிடையாது. எனவே, மீடியாக்கள் தர்மத்துடன் செயல்பட வேண்டும். கடந்த திமுக ஆட்சி முடியும் தருவாயில், நான்காவது ஆண்டில் மீடியாக்கள் அக்கட்சி செய்த ஊழல்களை பட்டியலிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.

ஆனால்,அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை தற்போது மீடியாக்கள் சுட்டிக் காட்டவில்லை. திமுக ஊழலின் ஊற்றுக்கண் என்றால்; அதிமுக உச்சக்கட்டம். எனவே, மீடியாக்கள் தான் நல்லவர்கள் யார் என்று வெளிக்காட்டி, மாற்றத்தை யாரால் அளிக்க முடியும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT