தமிழகம்

இசையால் இணைந்த விழி இழந்த ஜோடி: பண்ருட்டியில் ஒரு பரவச காதல் திருமணம்

செய்திப்பிரிவு

பண்ருட்டி அரசுப் பள்ளியில் பணியாற்றும் பார்வையற்ற இசை ஆசிரியர்கள் இரண்டு பேர், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர், மணிகண்டன் (35). பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சங்கீதா (25) என்பவரும் இசை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவருமே பார்வைக் குறைபாடு உடையவர்கள். ஆனால், இசை என்னும் நூலிழை இருவருடைய மனதையும் கட்டிப் போட்டது.

ஆசிரியர் கூட்டத்திற்கு வரும்போது பள்ளி வளாகத்தில் மணிகண்டனும், சங்கீதாவும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டு, நட்பாகி நாளடைவில் ஒருவரை ஒருவர் விரும்பத் துவங்கினர். இசை ஆசிரியர்களான இருவரும் காதல் திருமணம் செய்ய தீர்மானித்து பெற்றோரிடம் முடிவை தெரிவித்தனர். அவர்களும் இசை ஜோடியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர்.

இதைத் தொடர்ந்து பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மணிகண்டன்-சங்கீதா பணியாற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவ,மாணவிகளும் வந்திருந்து இருவரையும் வாழ்த்தினர்.

திருமணம் குறித்து மணிகண்டன் கூறுகையில், ‘இசை எங்கள் இரண்டு பேரையும் இணைத்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். நண்பர்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். பெற்றோரும் முழு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.

SCROLL FOR NEXT