மதுரை: கரோனா ஊரடங்கின் போது தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக மதுரை தொழிலாளர் துணை ஆணையர் விசாரிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்த ஜாகிர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "காரைக்குடியில் ஜவுளி கடை நடத்தி வருகிறேன். கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் 16.3.2020 முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. எங்கள் ஜவுளி கடையும் மூடப்பட்டு தொழிலாளர்கள் யாருக்கும் வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில் தேவகோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் 12.10.2021-ல் ஆய்வு செய்து கரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு தர வேண்டிய சம்பளம் ரூ.9,96,721-யை எங்களிடம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மதுரை தொழிலாளர் துணை ஆணையருக்கு பரிந்துரை அனுப்பினார். அதன் அடிப்படையில் தொழிலாளர் துணை ஆணையர் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி தொழிலாளர் ஆய்வாளர் மட்டுமே கடைகளில் ஆய்வு மேற்கொள்ள முடியும். உதவி ஆய்வாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும் எந்த தொழிலாளர்களும் புகார் அளிக்கவில்லை. ஊரடங்கின் பெரும்பாலன நாட்கள் கடைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராத நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியல்ல. எனவே மதுரை தொழிலாளர் துணை ஆணையர் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்." என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் வாதிடுகையில், கரோனா ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டதால் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறும் வகையில் தொழிலாளர் நல அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர் கோரிக்கையில் தலையிடுவதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. இதனால் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.