தமிழகம்

எந்த குடியிருப்பு யாருக்கு ஒதுக்கீடு:  முதல் முறையாக அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட்ட வாழ்விட மேம்பாட்டு வாரியம்

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் முதல் முறையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்த தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பல திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கு ஏற்ற வீடுகள் திட்டம், தனி வீடுகள் கட்டும் என்று மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளின் நிதி உதவியுடன் தமிழகம் முழுவதும் பல குடியிருப்புகளை கட்டி வருகிறது. வாரியம் தொடங்கப்பட்ட முதல் 2021ம் ஆண்டு வரை 4.13 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு குடிசை மக்களுக்கு அளிக்கப்படும் வீடுகளை அவர்கள் வேறு நபர்களுக்கு வாடகைக்கு வீடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பல குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களை தவிர்த்து வேறு நபர்கள்தான் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதை தடுக்கவும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் விவரத்தை முறைப்படுத்தவும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி முதல்முறையாக சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணையதளத்தில் அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 60 மேற்ப்பட்ட திட்டப்பகுதிகளில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், அடுக்குமாடி குடியிருப்பு எண், வீட்டில் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக இதுபோன்ற அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் கூறுகையில், "முதல் முறையாக வீடு ஒதுக்கீடு தொடர்பான தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வெளிப்படைத்தன்மை என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலம் மேலும் பல தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என்றார்

SCROLL FOR NEXT