சேலம்: சேலம் அஸ்தம்பட்டியில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான மத்திய சிறை உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பெய்த மழையின்போது, சிறையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து அங்கு சென்ற அஸ்தம்பட்டி போலீஸார் மற்றும் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல, நேற்று முன்தினம் பெய்த மழையின்போது சங்ககிரி கிளைச் சிறையின் 18 அடி உயர சுற்றுச்சுவரில் 60 அடி நீளம் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த அங்கு சென்ற சங்ககிரி உதவி ஆட்சியர் வேடியப்பன், வட்டாட்சியர் பானுமதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக சங்ககிரி கிளைச் சிறை கண்காணிப்பாளர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் பகுதியில் மணல் மூட்டை அடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.