சென்னை: தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் நேற்று தங்க மோதிரம் அணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, ``புதிய கல்விக் கொள்கையின்படி 3-வது மொழியாக எந்த மொழியை வேண்டுமென்றாலும் படிக்கலாம். தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கண்டிப்பாக தமிழில்தான் படிக்க வேண்டும். இதுதான் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலை.
தமிழ் இணைப்பு மொழியாக வேண்டும் என்றால் நிறைய இடத்தில் தமிழை படிக்க வைக்க வேண்டும். ஆனால், மாநில அரசு அதற்கான முயற்சியை எடுக்காமல் தமிழை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. தற்போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவருகிறது என்றவுடன் மொழி பிரச்சினையை வைத்து அரசியல் செய்கிறார்கள்'' என்றார்.
‘பீஸ்ட்’ படத்தில் இந்தி மொழி குறித்து நடிகர் விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, ``நிறைய படங்களில், நிறைய கருத்துகள் கூறப்படுகின்றன. படத்தில் இருக்க கூடிய கருத்துகளை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில், தமிழக பாஜகவுக்கும், தமிழக திரையுலகுக்கும் அற்புதமான ஒரு பந்தம் இருக்கிறது. படத்தில் ஒரு வசனம் சொல்கிறார்கள் என்றால் அது படம், அவ்வளவுதான்’’ என்றார் அண்ணாமலை.