புதுச்சேரி: புதுச்சேரியில் பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிப்பவர் முத்தமிழ்ச்செல்வன். இவர் அங்குள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது நுண்கலை ஆசிரியர் உமாபதியிடம் கிராம புறங்களில் பயனற்று கிடக்கும் தென்னை நார்,வாழை மட்டை,பனை மர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சி பெற்றார்.
இந்தநிலையில் ஓவியர் சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய ‘தமிழணங்கு’ ஓவியத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன் பதிவிட்டு, தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்தியிருந்தார். இதை பலரும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
முத்தமிழ்ச் செல்வன் அந்த ஓவியத்தை அப்படியே கொண்டு ஒரு சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த நுண்கலை சிற்பத்தை கண்ட எழுத்தாளர் இந்திரன், "தமிழ்ச் சமூகத்தில் இப்போதுதான் தமிழ் அழகியல் கூறுகளுடன் கூடிய படைப்புச் செயல்பாடு தீவிரம்அடைந்துள்ளது. என் பிறந்த மண் புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் முத்தமிழ்ச்செல்வன், 11ம் வகுப்பு மாணவன், அதை சிற்பமாக வெளிப்பாடு செய்திருக்கிறான். ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் இதனை மிக உன்னதமான தமிழ் மண்ணின்அடையாளத்தோடு கூடிய அசல் படைப்புக் கலை வெளிப்பாடாக கருதுகிறேன்.
மேல்நாட்டுச் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தேய்ந்து போகும் நிலாக்களாக நிறைய படைப்புகள் நவீனத் தமிழ் ஓவியர்களால் செய்யப்படும்போது மாணவன் முத்தமிழ்ச் செல்வன் படைப்பு மிகவும் அசல் ஜீவரசத்துடன் விளங்குவதாக நான் கருதுகிறேன். நமது கலை தமிழ்அடையாளம் கொண்டதாக மாற வேண்டும் என்று வற்புறுத்தி வருவது இன்று இயல்பாகவே கள்ளம் கபடமற்ற நிலையில் நனவாகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் முத்தமிழ்ச்செல்வன் இதுபற்றி கூறுகையில், "இயற்கையில் மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் பொருட்களைக் கொண்டு கலைப்பொருட்களை உருவாக்குவோம்.
தற்போது மூங்கில், இலை களைக் கொண்டு தமிழணங்கை சிற்பமாக வடிவமைத்தேன். என் தாயை சிலையாக வடிவமைத்தது போல் இருந்தது" என்று குறிப்பிட்டார்.
மூங்கில், இலை களைக் கொண்டு தமிழணங்கை சிற்பமாக வடிவமைத்தேன். என் தாயை சிலையாக வடிவமைத்தது போல் இருந்தது.