சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள் பகுதியில் நிற்கும் கார். 
தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சென்ற கார்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் திடீரென கார் ஒன்று வந்தது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

நடராஜர் கோயிலுக்கு வரும்உயர் அதிகாரிகள் கார்களை கீழவீதி கோபுரத்திற்கு வெளியேநிறுத்திவிட்டு வருவது வழக்கம்.இவர்களின் கார்களை தீட்சிதர்கள் அதைத் தாண்டி அனுமதிப் பதில்லை. சமீபத்தில் கோயிலுக்கு வந்த புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இதே நிலை தான்.

ஆனால் நேற்று முன்தினம் இரவுகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் கார் மட்டும் விதிகளை மீறி கோயிலின் வெளிப்பிரகாரத்தில் 21 படிகளின் அருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர் லட்சார்ச்சணை செய்ய பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கார் கோயில் வளாகத்தில் 21 படிகளின் அருகே நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ‘ஆளுநர் கார் என்றாலும் வெளியே தான் நிற்க வேண்டும். ஆனால், காசு கொடுத்தால் தில்லை கோயிலின் உள்ளே வரை கார் செல்லும்’ என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து கோயில் தீட்சிதர்களின் செயலாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது, "இது குறித்து நிர்வாக ரீதியாக பேசியுள ்ளோம். பின்னர் பேசுகிறோம்" என மழுப்பலாக பதில் கூறினார்.

இதுகுறித்து சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா கூறுகையில், "தீட்சிதர் ஒருவர் அவருக்கு தெரிந்த குடும்பத்தினரை காருடன்கோயில் உள்ளேயே அழைத்துச் சென்றுள்ளார். கண்டிக்கத்தக்க அத்துமீறல் இது. நடராஜர் கோயி லில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்கின்றன. கோயிலை காக்கவும் தீட்சிதர்களின் விதிமீறலை தடுக்கவும் தமிழக அரசு உடனடியாக நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்" என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். அதற்கு எதிராக அண்மையில் போராட்டங்கள் நடைபெற்று, அதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார் கோயில் வளாகத்தில் 21 படிகளின் அருகே நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT