தருமபுரி: கேரளா மாநிலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் வரை கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி ஒன்றியம் பாலவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக கெயில் நிறுவன அதிகாரிகள் எரிவாயு குழாய் அமையவுள்ள நிலங்களில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன் தினம் பாலவாடி பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்ட பகுதிக்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ‘ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அதுவரை அளவீடு செய்யக் கூடாது’ என விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி அன்று அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், நேற்று 100-க்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி பாலவாடி பகுதி விளைநிலங்களில் மீண்டும் அளவீடு செய்யும் பணியை கெயில் நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டனர்.
எனவே, நேற்றும் அப்பகுதி விவசாயிகள் திரண்டு அளவீட்டு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூசாரி(எ) குட்டையன் மகனான விவசாயி கணேசன்(45) என்பவர் தனது விளைநிலத்துக்கு சென்று, நிலத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அப்பகுதி விவசாயிகளும், கணேசனின் உறவினர்களும் திரண்டு அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இருப்பினும், போராட்ட பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வராத நிலையில் தருமபுரி-பென்னாகரம் நெடுஞ்சாலையில் ஏ.செக்காரப்பட்டி பேருந்து நிறுத்த பகுதிக்கு கணேசனின் உடலுடன் சென்று சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் கூறினர். விவசாயிகள் தரப்பு பிரதிநிதிகளுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பேச்சு நடத்தினார். இறந்தவரின் குடும்பத்துக்கு தமிழக அரசிடம் இருந்து முதல்வரின் நிவாரண நிதி பெற்றுத் தரவும், உயிரிழந்த விவசாயியின் மகளுக்கு அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கெயில் நிறுவனத்திடம் இருந்தும் நிவாரணம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுமுகமான சூழல் ஏற்படும் வரை நில அளவீடு பணி மேற்கொள்ளப்படாது’ என்று ஆட்சியர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.