சென்னை: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘நமது பூமி நமது சுகாதாரம்’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
இதில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சிம்ஸ் மருத்துவமனை சமூக மருத்துவம் மற்றும் தொற்று நோய்கள் துறை தலைவர் டாக்டர் பெ.குகானந்தம், டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா உதவி மேலாளர் டாக்டர் ஜோட்ஸ்னா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அவர்கள் பேசியதாவது:
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இன்றைக்கு உலகெங்குமுள்ள மனிதர்கள் அதிமுக்கியமாக தனிமனித ஒழுக்கத்தையும், உடற் பயிற்சியையும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். நம்மை சுத்தமாக வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், நாம் வாழும் பூமியை மாசற்ற பூமியாக மீட்டெடுக்கவும் மரங்களை வளர்க்க வேண்டும்.
பசுமைக் காவலர் விருது
அதன்படி, ‘பசுமை சைதை’ எனும் திட்டத்தைத் தொடங்கி, அப்பகுதியில் உள்ளவர்களின் பிறந்த நாளின்போது மரக்கன்றுகளை நட்டோம். அதனைப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடமே வழங்கினோம். அதனால் இன்றைக்கு சைதாப்பேட்டை முழுவதும் 95 ஆயிரம் மரக்கன்றுகளை நடப்பட்டு, பசுமை சைதாப்பேட்டையாக மாறியிருக்கிறது. மரக்கன்றுகளைச் சிறந்த முறையில் வளர்த்தெடுப்பவர்களுக்கு பசுமைக்காவலர் எனும் விருதையும் வழங்குகிறோம்.
தமிழகத்தின் பசுமைப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு 22.5 சதவீதமே உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரிக்க 7 முக்கிய செயல்திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றாகச் செயலாக்கம் பெறும்போது தமிழகத்தின் பசுமைப் பரப்பு நிச்சயம் அதிகரிக்கும். இயற்கையும், சுற்றுச்சூழலும் நன்றாக இருந்தால் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். உலக சுகாதார தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்திருக்கும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சி மூலமாக பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.
டாக்டர் பெ.குகானந்தம்: தனிமனித சுகாதாரமும், சுற்றுச்சூழல் சுகாதாரமும் ஒன்றோடொன்று இணைந்தது. காலரா, காசநோய், பிளேக் போன்ற தொற்றுநோய்கள் சுகாதாரமற்ற சூழலில்தான் அதிகமாக பரவுகின்றன. சுகாதாரமற்ற கழிப்பறை, மாசு படிந்த குடிநீர், பாதுகாப்பற்ற வீடு ஆகிய பிரச்சினைகளால் இன்னமும் பல கோடி மக்கள் அவதிப்படுகின்றனர். நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமாக தொற்றுநோய் பரவலை நம்மால் தடுத்திட முடியும். கரோனா வைரஸ் பரவல் காலங்களில் நாம் கடைபிடித்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மக்கள் மனங்களில் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் மனமாற்றமும் தேவைப்படுகிறது. நோய் வரும்முன் தடுப்பதற்காக நாம் செய்யும் செலவைவிட, நோய் பரவிய பிறகு செய்யும் செலவு பன்மடங்கு அதிகமானது என்பதை உணர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
டாக்டர் ஜோட்ஸ்னா: அன்றாட வாழ்வில் பழக்கவழக்க மாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலம் பள்ளிகள், இல்லங்கள் மற்றும் சமூகத்தில் துப்புரவு சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா சுகாதாரக் கல்வி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ரெக்கிட்டின் இந்த தொலைநோக்குத் திட்டமானது தெற்காசிய கூட்டு வெளியுறவு விவகாரங்கள் இயக்குநர் ரவி பட்நாகரின் முயற்சிகளால் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டம் நம் நாட்டிலுள்ள 2 கோடி பள்ளிக் குழந்தைகளைச் சென்றடைந்துள்ளது.
பள்ளிகளில் கற்றுக்கொள்ளப்படும் சுகாதார பழக்கவழக்கங்கள் குழந்தைகளை மாற்றத்தின் தூதுவர்களாக வளர்த் தெடுக்கும். ஏனென்றால் அந்தக் குழந்தைகள் தம் குடும்பங்கள் மற்றும் சமூகத்துக்கு இவற்றைக் கற்றுக்கொடுப்பார்கள்.
கலை, பண்பாட்டு நிகழ்ச்சி வழியாக..
‘இந்து தமிழ் திசை' குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட ‘சுத்தம் சுகாதாரம்’ திட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் மருத்துவ சமூகமும் அரசும் கைகோத்திருக்கிறது. மக்களும் தேசமும் ஒரு உலகளாவிய பெருந்தொற்றிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சுகாதார கல்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் செய்திகளை கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டு வரு கிறோம். இவ்வாறு அவர்கள் பேசினர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியைக் காணத் தவற விட்டவர்கள் https://www.htamil.org/00455 என்ற லிங்க்கில் பார்க்கலாம்.