உதகை குதிரை பந்தய மைதானத்தில் நடந்த போட்டியொன்றில் சீறிப் பாய்ந்த குதிரைகள். (கோப்பு படம்) 
தமிழகம்

உதகையில் குதிரை பந்தயம் நாளை தொடக்கம்: 114 பந்தயங்களுக்கு பரிசு தொகையாக ரூ.5.35 கோடி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோடை சீசனின்போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி, ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு 135-வது குதிரை பந்தயம் நாளை (ஏப்ரல் 14) தொடங்கி ஜூன் மாதம் 10-ம் தேதி வரை 2 மாதங்கள் நடக்கின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 600 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மெட்ராஸ் ரேஸ்கிளப் செயலாளர் எஸ். நிர்மல்பிரசாத் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி ஜூன் மாதம் வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 600 குதிரைகள் போட்டியில் கலந்து கொள்கின்றன. 29 குதிரைப் பயிற்சியாளர்கள் மற்றும் 39 ஜாக்கிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 18 நாட்களில் 114 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகையாக ரூ.5.35 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடைபெறும். வியாழன்,வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பந்தயங்கள் நடக்கும். முக்கிய பந்தயங்களான ‘தி நீல்கிரிஸ் 1,000 கீனிஸ்’ கிரேட் 3 ஏப்ரல் 30-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி மே 1-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டி மே 15-ம் தேதியும் நடைபெற உள்ளன. ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி ஜூன் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.

முதன்முறையாக உதகையில் டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவு கோப்பை போட்டி மே 14-ம் தேதியும், ஊட்டி ஜூவைனல் ஸ்பிரின்ட் கோப்பை ஜூன் 3-ம் தேதியும் நடத்தப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT