சேலம்: கட்சி தொண்டர்களின் முழு ஆதரவு எங்களுக்கு உள்ளது என சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் காலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார். மாலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு மண்டபத்துக்கு சென்றார்.
நேற்று காலை சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள ஆன்மிக சுற்றுப்பயணத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள்காட்டும் அன்பால் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். “சென்னைஉரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் சசிகலாவுக்கு சாதகமாக தீர்ப்பு வராது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தனிமனிதரின் கருத்து அரசியலில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. கட்சி தொண்டர்களின் முழு ஆதரவும் எங்களுக்கு உள்ளது. தொண்டர்களும், பொதுமக்களும் எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து, அவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நேற்று மாலை ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில், சிக்கரசம்பாளையம் அண்ணமார் சுவாமி-பட்டத்தரசி அம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் தரிசனம் செய்த பிறகு அவிநாசிக்கு புறப்பட்டுச் சென்றார்.