சென்னை: ‘ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை, இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்கும்’ என்று,விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சி அமைந்த பின் 2-வது முறையாக இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை அரசு முனைப்போடு நிறைவேற்றி வருகிறது.
தலையாய கடமை
ஆதிக்க சக்திகள் திணித்த தீண்டாமை, எந்த வடிவத்திலும் சமூகத்தில் இருக்கக் கூடாது என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அதை உறுதிசெய்வதுதான் அரசின் தலையாயக் கடமையாகும். சமத்துவத்தை நிலைநாட்டுவதை அனைத்து தனிநபர்களும் தங்கள் வாழ்க்கை நெறியாக மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதனால்தான், அரசு பொறுப்பேற்றதும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சட்டப்படி ‘உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு’ திருத்தி அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் 19-ம் தேதிநடைபெற்ற நிலையில், பங்கேற்றஉறுப்பினர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்து, கூட்டத்தொடரிலேயே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நல ஆணையம்
அதில்தான், ‘மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்’ அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டேன். உடனடியாக சட்டம் இயற்றப்பட்டது.
வன்கொடுமையைத் தடுக்கநாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கவே செய்கின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, ரூ. 85 ஆயிரத்தில் இருந்து ரூ. 8.25 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த தொகை உயர்த்தப்பட்டு, குறைந்தபட்சம் ரூ.1 லட்சம், அதிபட்சம் ரூ.12 லட்சம் வரை மாநில அரசு நிதியின் மூலம் வழங்கப்படும். இதற்கான அரசாணையும் போடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சிறப்பு நீதிமன்றங்களுடன் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறப்புக் கூறுகள் திட்டம்
சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் ரூ.16,442 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் ரூ.1,589 கோடியும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த 2022-23-ம் ஆண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.4,281 கோடியில், கல்விசார்ந்த திட்டங்களுக்கு ரூ.3,571 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையுடன், ஆதிதிராவிட மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்விக் கட்டண சலுகைகள், விலையில்லாச் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அனைத்துத் துறைகளிடமிருந்து தொகுதிவாரியாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், அரசுப்பணிகளில் ஆதிதிராவிடருக்கான குறைவுப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘சமத்துவ விருந்து’
சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வன் என்னை சந்தித்து, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த ‘சமபந்தி போஜனம்’ என்பதை பெயர் மாற்ற வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இனிமேல் ‘சமத்துவ விருந்து’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்கும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.