சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சிஐடிஐஐஎஸ் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 28 பள்ளிகள் முழுமையாக நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட உள்ளன.
ரூ.4.53 கோடி மதிப்பில்..
அதன்படி, இந்தப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிப்பறைகள், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், சிறப்பு விளையாட்டுப் பயிற்சிகள், ஸ்டெம் ஆய்வகங்கள் மற்றும் மொழி சார்ந்த ஆய்வகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.4.53 கோடி மதிப்பில் ராயபுரம் மண்டலம் சிமென்ட்ரி சாலை மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மேயர் ஆர்.பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையினை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து, அடையாறு மண்டலம் காந்தி கிராமத்தில் உள்ள லட்சுமிபுரம் சென்னை நடுநிலைப்பள்ளி, திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றையும் ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.