தமிழகம்

சென்னை அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.4.72 கோடி பறிமுதல்: கரூரில் இருந்து கொண்டுவரப்பட்டதா?

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூரில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.4.72 கோடியை பறிமுதல் செய்தனர். இது கரூரில் இருந்து கொண்டுவரப்பட்டதா என்று விசாரணை நடந்துவருகிறது.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் ‘கமாண்டர்ஸ் கோர்ட்’ என்ற 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் விஜய் கிருஷ்ணசாமியின் வீடும் இந்த குடியிருப்பில் உள்ளது.

இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தேர்தல் அலுவலர் சங்கீதா, வருமான வரித் துறை அதிகாரிகள் ஆல்பர்ட், சஞ்சய் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை அந்த குடியிருப்புக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, விஜய் கிருஷ்ண சாமியின் வீட்டில் இருந்த ரூ.4 கோடியே 72 லட்சத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவ்வளவு பணம் வைத்திருப்ப தற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கரூரில் அதிமுக பிரமுகர் அன்புநாதனின் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல கோடி ரூபாயை அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் மறைத்து விட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். தற்போது சென்னையில் கைப்பற்றப்பட்ட பணம், கரூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோடிக்கணக்கில் பணம் சிக்கியது குறித்து தேர்தல் அதிகாரிகள், வருமான வரித் துறையினர், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில அரசியல் கட்சி பிரமுகர்கள் அங்கு வந்து சென்றது அதில் பதிவாகியுள்ளது. அதுபற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT