சென்னை: தீப்பெட்டித் தயாரிப்பில் முக்கியமூலப் பொருட்களான மெழுகு மற்றும் பொட்டாசியம் குளோரைடு தடையின்றிக் கிடைக்க அரசுநடவடிக்கை எடுக்கும் என்றுசட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தில், தீப்பெட்டி தொழிலுக்கான பொட்டாசியம் குளோரைடு, பசை மற்றும் அட்டை ஆகியவற்றுக்கான விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்று வலியறுத்தி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்மீது எம்எல்ஏ-க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக) , கடம்பூர் ராஜு (அதிமுக) , அசோகன் (காங்கிரஸ்), நாகைமாலி (சிபிஎம்), ஜி.கே.மணி(பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக)ஆகியோர் பேசினர். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதில் அளித்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் 500 தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழில் நிறுவனங்களின் நலனுக்காக 6 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கோவில்பட்டி, சாத்தூரைச் சேர்ந்த இரு சங்கங்கள், தீப்பெட்டி மூலப் பொருட்கள் விலை உயர்வுக்காக உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
இதற்குத் தீர்வுகாண எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உற்பத்தியாளர்கள், ரஷ்யா, உக்ரைன் போர் மற்றும்பெலாரூஸ் மீதான அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக, பொட்டாசியம் குளோரைடு இறக்குமதி தடைபட்டு, 50 சதவீதத்துக்கும் மேல் விலை உயர்ந்துள்ளதாகவும், மெழுகின் விலையும் உயர்ந்து கழிவுக் காகித தட்டுப்பாடு எற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதைக் கருத்தில் கொண்டு, இந்த தொழிலுக்கு முக்கிய மூலப் பொருளான மெழுகை, சிட்கோ நிறுவனத்தின் மூலம் சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்திடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கழிவு காகித இறக்குமதிக்கான தடை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நீக்கப்பட்டுள்ளதால், 6 முதல் 8 வாரங்களுக்குள் கழிவுக் காகிதம் இறக்குமதியாகும். இதனால், தீப்பெட்டி செய்வதற்கான காகிதஅட்டையின் விலையும் படிப்படியாகக் குறையும் எனத் தெரிகிறது.
மற்றொரு மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடு, ரஷ்யா, பெலாரூஸ் நாடுகளைத் தவிர்த்து ஜோர்டான் நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்து வருவதால், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு பொட்டாசியம் குளோரைடு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.