புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, பருவநிலை குறியீட்டு தரவரிசைப் பட்டியலை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு (எஸ்இசிஐ) சுற்று-1,முடிவில் குஜராத் முதலிடத்திலும் தமிழகம் 9வது இடத்திலும் உள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, பருவநிலை குறியீட்டு தரவரிசைப் பட்டியலானது ஒரு மாநிலத்தின் டிஸ்காம் செயல்பாடு, எரிசக்தி குறைந்த செலவில் நம்பகத்தன்மையோடு கிடைப்பது, தூய்மையான எரிசக்திக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், எரிசக்தி செயல்திறன், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை, புதிய முயற்சிகள் என்ற 6 காரணிகளின் கீழ் கணக்கீடு செய்யப்படுகிறது.
மாநிலங்கள், பெரிய, சிறிய மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதன்படி ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 43.4 புள்ளிகளை பெற்று 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சிறிய மாநிலங்களின் தரவரிசையில் கோவா முதலிடத்தையும், திரிபுரா 2வது இடத்தையும், மணிப்பூர் 3வது இடத்தையும் முறையே பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை சண்டிகர், டெல்லி, டாமன் அண்ட் டியூ ஆகியவை முதல் 3 இடத்தை பிடித்துள்ளன. புதுச்சேரி 48.5 சராசரி புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
மாநிலத்தின் கடன், இழப்பு, கட்டணம் உள்ளிட்டவை அடிப்படையாகக் கணக்கீடு செய்யப்பட்ட டிஸ்காம் தலைப்பில் தமிழகம் 57.3 புள்ளிகள் பெற்று 14 வது இடத்தை பெற்றுள்ளது. 2வது பிரிவான எரிசக்தி எளிதில் மற்றும் குறைந்த செலவில் கிடைப்பதில் தமிழகம் 46.3 புள்ளிகளுடன் 12 இடத்தில் உள்ளது. தூய்மை எரிசக்தி பிரிவில் 12 புள்ளிகளுடன் தமிழகம் 6 இடத்தை பிடித்துள்ளது. எரிசக்தி செயல்திறன் தமிழ்நாடு 85.4 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. சுற்றுச்சூழல் நீடித்திருத்தல் பிரிவில் 39.2 புள்ளிகளுடன் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. புதிய முயற்சிகள் பிரிவில் 4 புள்ளிகளுடன் தமிழகம் 15வது இடத்தைப் பிடித்துள்ளது.