சேலம்: சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று சேலம், எடப்பாடியில் அதிமுக-வினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் நேற்று சசிகலா ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என நேற்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை வரவேற்று சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர்-ஜெயலலிதா மணிமண்டபம் எதிரே அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக-வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பின்னர், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை கூறும்போது, “அதிமுக-வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இத்தீர்ப்பு தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். இதேபோல, எடப்பாடியில் அதிமுக நகர செயலாளர் முருகன் தலைமையில் பேருந்து நிலையம் எதிரே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.