சென்னை: சொத்து வரி உயர்வை ரத்து செய்யவலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:
சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று திமுக அரசு கூறுவதை ஏற்க முடியாது. தனக்கு சாதகமான விஷயங்களாக இருந்தால் மத்திய அரசு மீது பழியை போடுவது திமுகவுக்கு வாடிக்கையாகிவிட்டது. நம்பி வாக்களித்த மக்களின் தலையில் சொத்து வரி உயர்வை ஏற்றுவது கண்டனத்துக்குரியது. வாக்களித்த மக்களுக்கு அரசு செய்த நன்றிக் கடன் தான் இந்த சொத்து வரி உயர்வு.
மத்திய அரசு கூட, பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்கிறது. ஆனால் தமிழக அரசு சொத்து வரியை ரத்து செய்ய மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிக்கு மாறாக சொத்து வரியை உயர்த்தியதால் வீட்டு வாடகை, காய்கறி விலை உயர்ந்து வாடகைக்கு வசிப்போர் அவதிக்குள்ளாவார்கள். எனவே சொத்துவரி உயர்வு மீது தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலபொதுச்செயலர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், வேணுகோபால், திருவேங்கடம் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.