சென்னை: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபாட்டிக் கருவி மூலம், புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பதிவு செய்யும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேஷன் காசிராஜன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ்செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு எவ்வித வருமான உச்சவரம்பும் இன்றி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற 1,414 செய்தியாளர் குடும்பங்களை இணைக்கும் விதத்தில் இதுவரை 258 செய்தியாளர்கள் குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் 2 வாரங்களுக்கு நடைபெறுகிறது. அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் குடும்பங்கள் இதில் இணைந்து கொள்ளலாம்.
அரசு பன்னோக்கு உயர் சிறப்புமருத்துவமனையில் ரூ.35 கோடியில் அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபாட்டிக்) அறுவை சிகிச்சைஅரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 15-ம் தேதிதொடங்கி வைத்தார். எய்ம்ஸ்மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் இந்த அதிநவீனஇயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை, இப்போது அரசு மருத்துவமனைகளிலும் அளிக்கப்படுகிறது.
கடந்த 7-ம் தேதி, திருப்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன்(44) என்பவரின் சிறுநீர் பாதையில் புற்றுநோய் கண்டறியப்பட்டு, ரோபாட்டிக் கருவியினால் இங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 2-வது நாளே நலமுடன் வீடு திரும்பிஉள்ளார். தமிழகத்தில் இதுவொருமருத்துவ சாதனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.