தமிழகம்

அதிமுக வேட்பாளர் மீது ஆக்கிரமிப்பு புகார்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

வேளச்சேரி அதிமுக வேட்பாளர் மீதான ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையை சேர்ந்த ஆர்.பொன்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

சென்னை மாநகராட்சியின் 192-வது வார்டுக்கு உட்பட்ட நீலாங்கரை குப்பம் பகுதியில் 72 சதுர அடி நிலத்தில் மாநகராட்சி டிவி, ரேடியோ அறை கட்டப்பட்டது. மாநகராட்சி தீர்மானத்தின்படி அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. அதன் பிறகு, அந்த இடத்தை இப்பகுதி அதிமுக கவுன்சிலர் எம்.சி.முனுசாமி ஆக்கிரமித்துக் கொண்டார். அந்த இடத்தை தனது கார் நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரரின் புகார் மீது சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை நடத்தி, ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர். கவுன்சிலர் எம்.சி.முனுசாமி தற்போது வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT