சேலம்: தமிழகத்தில் 195 இடங்களில் உள்ள வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகளில், 60 இடங்களில் மோசமான நிலையில் உள்ள வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக தேவைக்கேற்ப வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, சேலம் மற்றும் சங்ககிரியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஆகியவற்றில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் வாடகை உயர்வு என்பது மாநில அளவிலான பிரச்சினை. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். குடியிருப்பு வாரிய வீடுகள், நீர் நிலைகளில் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 195 இடங்களில் உள்ள வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகளில், 60 இடங்களில் உள்ள வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக தேவைக்கேற்ப வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரிய குடியிருப்புகளில் உள்ள வாடகை நிலுவையை வசூலிப்பதில் குழப்பம் உள்ளதால், குழு அமைத்து பரிந்துரை பெற முடிவு செய்துள்ளோம். இக்குழுவில் நீதிபதி ஒருவர் இருந்தால், தெளிவான பரிந்துரை கிடைக்கும் என்பதால் இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கம், செயற்பொறியாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.