கோவை: தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி முத்திரை பதிக்கும் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்தார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் சாலையில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கட்டிடத்தை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்கள் ஊழல் இல்லாத கட்சியை விரும்புகின்றனர். இந்தியாவிலேயே ஊழல் இல்லாத கட்சி ஆம் ஆத்மி கட்சி ஆகும். அதற்கு உதாரணமே பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்கள். மக்கள் நலன் காக்கும் அரசாக டெல்லியில் செயல்பட்டதாலேயே பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். தொடர்ந்து குஜராத், இமாச்சலபிரதேச தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைக்கும். தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி முத்திரை பதிக்கும் காலம் வந்து விட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாட்டால் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி மக்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மாற்றத்தை விரும்புவதே அதற்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா, மாநில துணைத் தலைவர் தாமோதரன், மாவட்ட தலைவர் வாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.