மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.ஆ.ராசா எம்.பி. பேசியதாவது: அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி தமிழக அரசின் கஜானாவை காலி செய்தார்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் தனது நிர்வாகத் திறமையால் அதை சரி செய்து வருகிறார்.இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கை முதல்வர் துணிச்சலோடு எதிர்த்து வருகிறார். இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நினைத்தால் தமிழகம் தனி நாடாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மாநில முதல்வர்களை அடக்கியாள நினைக்கும் பாஜகவின் சர்வாதிகாரப்போக்கு தமிழகத்தில் எடுபடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.