தமிழகம்

கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் திருப்பத்தூர்: சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தப்படுமா?

இ.ஜெகநாதன்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வரும் நிலையில் ரூ.12 கோடியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன.

திருப்பத்தூர் காளியம்மன் கோயில் பகுதியில் பயன்பாடின்றி வீணாகி வரும் சுத்திகரிப்பு நிலையம். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு மிகுந்த 50 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி திருப்பத்தூரில் காளியம்மன் கோயில், தம்பிபட்டி காளையப்பா நகர் ஆகிய 2 இடங்களில் ரூ.12 கோடியில் 2 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. தினமும் 1.2 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் 2 கிணறுகள், 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.

முதல் கட்டமாக இத்திட்டத்தை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனமே குடிநீரை விநியோகித்தது. ஒரு ரேஷன் கார்டுக்கு தினமும் 2 குடம் வீதம் தண்ணீர் வழங்கியது. ஒப்பந்தப்படி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையங்களை பேரூராட்சி நிர்வாகத்திடம் தனியார் நிறுவனம் ஒப்படைத்தது.

ஆனால் போதிய நிதி இல்லை என்று கூறி சுத்திகரிப்பு நிலையங்களை எடுத்து நடத்த பேரூராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டியது. இதனால் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாடின்றி முடங்கியது.

இந்நிலையில் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதன் பிறகும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது திருப்பத்தூர் பேரூராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறையால் தனியாரிடம் தண்ணீர் பெற மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை மக்கள் செலவழிக்கும் நிலை உள்ளது.

தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டு அதிக அளவில் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். சுத்திகரிப்பு நிலையங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘மொபைல் போனில் எந்த தகவலும் சொல்லக் கூடாது என்று மேலிடத்து உத்தரவு உள்ளது. உங்கள் கேள்வி தொடர்பாக கடிதம் அனுப்புங்கள். அதற்குப் பதில் தருகிறேன் என்று கூறினார்.

SCROLL FOR NEXT