தமிழகம்

ஆம்புலன்ஸ்கள், காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படலாம்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

ஆம்புலன்ஸ்கள், காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர்களுக்கு தருவதற்காக அதிமுக நிர்வாகி ஒருவரின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த வீட்டில் தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர். அந்த சோதனையில் ரூ.4.72 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பணத்தை பதுக்கி வைத்திருந்த அதிமுக நிர்வாகியும், அவரது மகனும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சருக்கும் நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவரின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டு அங்கும் பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் அதிமுக நிர்வாகி வீட்டிலிருந்து ரூ.4.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த விசாரணை முடிவதற்கு முன்பாகவே சென்னையில் பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு நாட்களில் மட்டும் ரூ.11 கோடிக்கும் கூடுதலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக கூறப்படும் போதிலும், உண்மையில் பிடிபட்ட பணத்தின் மதிப்பு இன்னும் பல மடங்கு இருக்கலாம். அந்த வகையில் பார்த்தால் தேர்தல் களத்தில் அதிமுக இறக்க திட்டமிட்டுள்ள பணத்தில் 0.01 சதவீதம் கூட இன்னும் பிடிபடவில்லை.

அமைச்சர்களின் மற்ற பினாமிகள் மூலமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆம்புலன்ஸ்களிலும், காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களிலும் இப்போது கூட பணம் கொண்டு செல்லப்படலாம். தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் அதிமுகவின் அனுதாபிகளாக இருப்பதும் இதற்கு இன்னொரு காரணமாகும்.

தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள், 5 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 18 அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட வேண்டிய அதிகாரிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அத்தகைய அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்வதுடன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT