அதிமுக வேட்பாளர் பட்டியலில் முதலில் இடம்பெறாத மதுரை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, நேற்று திடீரென மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும், மேயருமான வி.வி. ராஜன் செல்லப்பா எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. நீண்டகாலமாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். இவருக்குப் பின் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் அமைச்சராகவும், கட்சியின் மாநிலப் பொறுப் புகளிலும் பதவிகளை பெற்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மேயராக ஆன வி.வி. ராஜன்செல்லப்பா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, கட்சியில் மீண்டும் செல்வாக்கு பெற ஆரம்பித்தார். அண்மையில் அதிமுகவில் புறநகர் மாவட்டச் செயலாளராகவும் நியமிக் கப்பட்டார். இந்த தேர்தலில் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக் கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜன்செல்லப்பாவின் பெயர் இடம்பெறவில்லை. அதேநே ரத்தில் அமைச்சர் செல்லூர் கே. ராஜுக்கு சீட் கிடைத்ததால் மேயர் தரப்பினர் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்தனர். ஆனாலும், ஏமாற் றத்தை வெளிக்காட்டாமல் சென்னையிலேயே முகாமிட்டு, தலைமைக்கு நெருக்கமானவர்கள் மூலம் மீண்டும் சீட் பெற மேயர் முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை முதல் திடீரென தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதனால், மதுரை மாவட்டத்திலும் மாற்றம் வரலாம் என வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களிடம் கலக்கம் ஏற்பட்டது. அவர்கள் நினைத்ததுபோல, நேற்று மாலை திடீரென மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியனுக்கு பதிலாக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், மேயர் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் மேயரை, மாநகர் மாவட்டத் துக்குட்பட்ட வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்தது, மாநகர் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை வடக்குத் தொகுதி அமைச்சர் செல்லூர் கே. ராஜூவின் சொந்த தொகுதி என்பதோடு, அவர் மாவட்டச் செயலாளராக இருக்கும் மாநகர் பகுதியில் இருப்பதால், மேயரை வெற்றிபெற வைத்தாக வேண்டிய நெருக்கடி அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது.