இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோடை விழா, மலர் கண்காட்சிக்கு கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது. மே இறுதியில் கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடைக்கானலில் கோடை விழா நடத்தப்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக்கள் முற்றிலும் குறைந்து, கட்டுப்பாடுகள் விலக் கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் இந்த ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை நடத்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் திட்டுமிட்டுள்ளது. இவ் விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக பிரையண்ட் பூங்கா வில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் பல்வேறு வகையான பூச்செடிகள் நடப்பட்டுள்ளன. மயிலின் தோகை வடிவில் மலர் செடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பூத்துக் குலுங்கும்போது மயிலின் தோகை பல வண்ணங் களில் ரம்மியமாக காட்சியளிக்கும்.
ஊட்டி மலர் கண்காட்சி முடிந்த பிறகு கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதனால் மலர் கண்காட்சி மே கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறையினர் செய்து வருகின்றனர்.
பத்து நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், படகுப் போட்டி, வாத்து பிடிக்கும் போட்டி, அலங்கார படகுகள் அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டும் இவற்றுக்குப் பல்வேறு துறைகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.