வேலூர் பேருந்து நிலையம் பகுதியில் ஹாரன் எழுப்பிய பிரச்சினையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை, ஓட்டல் உரிமையாளர்கள் தாக்கினர். இதனை கண்டித்து, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாலை மாவட்டம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (49). அரசுப் பேருந்து ஓட்டுநர். இவர், அம்பத்தூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் பேருந்தின் ஓட்டுநராக நேற்று இருந்தார். இந்த பேருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று பகல் வந்தது. அப்போது, பேருந்து நிலையம் அருகில் அதிக பேருந்துகள் தொடர்ந்து இருந்ததால் ஓட்டுநர் செல்வம் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.
பேருந்து நிலையத்துக்கு வெளியே தேநீர்கடை மற்றும் உணவகம் நடத்தி வரும் வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் ஹாரன் அடிக்கக் கூடாது என பேருந்து ஓட்டுநர் செல்வத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டி எச்சரித்துள்ளனர். வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதால் ஹாரன் அடிப்பதாக செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென உணவக உரிமையாளர்கள் இருவரும், ஓட்டுநர் செல்வத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், கையில் இருந்த சாவியால் தாக்கியதில் ஓட்டுநர் செல்வத்தின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. இந்த தகராறை தடுக்க சக பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விரைந்து சென்றுள்ளனர். இதைப் பார்த்ததும் உணவக உரிமையாளர்கள் இருவரும் தப்பியோடினர்.
தலையில் காயமடைந்த செல்வம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காட்பாடியில் இருந்து வேலூர் வரும் சாலையில் செல்லியம்மன் கோயில் எதிரே அருகருகே 3 அரசுப் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால் காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வரும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த தகவலின்பேரில் விரைந்து சென்ற வேலூர் வடக்கு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் ஓட்டுநர் செல்வத்தை தாக்கிவிட்டு தப்பிய 2 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.