கரூர்: கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன
கரூர் கோவை சாலையில் உள்ள திருகாம்புலியூரில் தனியார் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. இங்கு இரு சக்கர வாகன உதிரி பாகனங்கள் விற்பனையகமும், இரு சக்கர வாகன பழுது நீக்கும் இடமும் (சர்வீஸ் சென்டர்) செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு விற்பனை நிலையத்தில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதையடுத்து கரூர் தீயணைப்ப நிலையத்தில் இருந்து 3 வாகனங்களில் வந்த வீரர்கள் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரியும் பகுதியை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் பொக்லைன் பயன்படுத்தி கட்டிடம் அருகேயுள்ள கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன. தனியார் டேங்கர் லாரிகள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. நீண்ட நேரமாக போராடி சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே தீயை அணைத்தனர்.
இதில் விற்பனையகத்தில் இருந்து இரு சக்கர வாகனங்கள், பழுது நீக்க விடப்பட்டிருந்த வாகனங்கள், உதிரிபாகனங்கள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்ததன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நள்ளிரவில் லாரிக்கு தீ வைப்பு
கரூர் மாவட்டம் பவித்திரத்தில் இருந்து புலியூருக்கு டிப்பர் லாரியில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு அன்பழகன் (29) என்பவர் லாரியை ஓட்டி சென்றுள்ளார். மாயனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (33) கிளீனர் உடனிருந்துள்ளார்.
கோடங்கிப்பட்டி பிரிவு நால்ரோடு அருகே நள்ளிரவு 1 மணிக்கு லாரி வந்தப்போது கார் மற்றும் 2 சக்கர வாகனத்தில் வந்த சிலர் லாரியை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் கிளீனரை இருவரையும் அடித்து கீழே தள்ளவிட்டு பின்பு லாரிக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதில் லாரியின் கேபின் முழுவதும் எரிந்து சேதமடைந்துவிட்டது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.