தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாததால் தேர்தல் புறக்கணிப்பில் மக்கள் ஈடுபட்டுள்ளதால், 100 சதவீத வாக்குப்பதிவு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கதிரவன் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வாக்குரிமை குறித்து குறும்படங்கள், விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான பகுதிகளில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள், அடிப்படை வசதிகளை நிறை வேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல கிராமங்களில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், வேட்பாளர்கள் யாரும் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வர வேண்டாம் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பிளக்ஸ் பேனர்களும், வீடுகளில் கருப்புக் கொடிகளையும் கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக படேதலாவ் ஏரி கால்வாய் இணைப்பு திட்டத்திற்காக 32 ஊராட்சிகளில் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறியுள்ளனர். வரும் 15-ம் தேதிக்குள் சாதிச் சான்றிதழ்கள் வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக பன்னியாண்டிகள் சங்கத்தினரும், சாலை வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே வாக்குளிப்போம் என ஏக்கல்நத்தம் மலை கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் சமரசம்
இதனிடையே தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்த ஏக்கல்நத்தம் மலைகிராம மக்கள், சின்னபுளிவரிசை கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தீர்க்கப்படாத, அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்து வருவதால், 100 சதவீத வாக்குப் பதிவு பாதிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் அதிகாரிகளும், வேட்பாளர்களும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து படேதலாவ் ஏரியில் கருப்புக்கொடியுடன் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ பேனர்.