கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவை தொழில் துறையினர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.வி.கார்த்திக், கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு, டான்சியா துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல், டாக்ட் கோவை மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ், காட்மா தலைவர் சிவக்குமார், ஐஐஎஃப் தலைவர் முத்துக்குமார், லகுஉத்யோக் பாரதி அமைப்பின் தலைவர் சிவக்குமார், கொடிசியா முன்னாள் தலைவர்கள் சுந்தரம், ராமமூர்த்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசினர்.
அப்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்வருடனான சந்திப்பு குறித்து தொழில் துறையினர் ‘இந்துதமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதா வது: இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொடர்ந்து அதிகரித்துவரும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் இத்தகைய தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. முதல்வர் இதற்கு முக்கியத்துவம் அளித்து மூலப்பொருட்கள் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தோம்.
எங்களது கோரிக்கையை கேட்டுக் கொண்ட முதல்வர், ஏற்கெனவே இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு மாநில அரசு முடிந்த அளவு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தார். தொழில் துறை அமைச்சரும் மூலப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் பெருநிறுவனங்களிடம் இதுதொடர் பாக பேசுவதாக உறுதியளித்தார்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு விவகாரம் தவிர, பவுண்டரி கழிவு மணலை பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். கோவை பம்ப் உற்பத்தி துறையை மேலும் வளர்க்க தேவையான அம்சங்களை நிறைவேற்ற வேண்டும்.
தாய்கோ வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொழில் முனைவோர்களுக்காக தனி கடன் திட்டம் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி அபராத வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மின்சார கட்டணத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் தெரிவித்தோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.