சென்னையில் நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் (22 கேரட்) பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 424-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 803-க்கு விற்கப்பட்டது. இது, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 779 ஆக இருந்தது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதியில் ஒரு பவுன் விலை ரூ.22 ஆயிரத்து 400-க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரை மாதம் தொடங் கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் தியாகராயநகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், தாம்பரம், பிராட்வே உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட கணிசமாக அதிகரித்து இருந்தது. இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘’சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் தேவை கூடியுள்ளது. இதேபோல், சர்வதேச அளவில் தங்கம் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலையில் உயர்வு இருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.