செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் முதல் கூட்டத்தில், அதன் தலைவர் மொக்தியார் அலி மஸ்தானுக்கு அவரது ஆதரவாளர்கள், பூசணிக்காயில் கற்பூரம் கொளுத்தி திருஷ்டி கழிக்கின்றனர். 
தமிழகம்

திராவிட மாடலை திருஷ்டி சுற்றி விளக்கிய திமுகவினர்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: கடந்த 5-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி கிராமத்தில் சமத்துவபுரத்தைத் திறந்து வைத்துவிட்டு, ஒழுந்தியாம்பட்டு அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பழமைவாதக் கருத்துகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் இன்றைக்கும் பின்பற்ற பரப்புரை செய்து கொண்டிருக்கக் கூடிய சிலரது ஆதிக்கத்தால், நாட்டில் என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எழுகின்றன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், புரியும்” என்றார்.

மேலும், “நாட்டுக்கே முன்னோடியாக விளங்கக்கூடிய நம்முடைய தமிழ்நாட்டில்தான் இத்தகைய சமத்துவபுரங்கள் உருவாகியிருக்கின்றன. இதுதான் சமத்துவத்தைப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய திராவிட மாடல்” என்றும் கூறினார். இந்நிகழ்வு முடிந்த மறுநாளான நேற்று முன்தினம் மாலை செஞ்சி பேரூராட்சியில், புதிய பேரூராட்சியின் முதல் மன்றக்கூட்டம் நடைபெற்றது. தலைவராக பொறுப்பேற்ற மொக்தியார் அலி மஸ்தானுக்கு, அவரது ஆதரவாளர்கள் பூசணிக்காயில் கற்பூரம் கொளுத்தி, திருஷ்டி சுற்றிப்போட்டு கூட்டம் தொடங்கியது.

‘பழமைவாதம், மூடப்பழக்கம்’ என்று முதல்வர் சில விஷயங்களை குறிப்பிடும்போது, நீங்கள் இப்படி திருஷ்டி சுற்றி போடுகிறீர்களே என்று இப்பகுதி திமுகவினரிடம் கேட்டபோது, “மொக்தியார் அலி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு, மகத்தான வெற்றிபெற்று, பேரூராட்சித் தலைவராக பதவியேற்றுள்ளார். அவருக்கு கண் திருஷ்டி பட்டிருக்கும். திருஷ்டி கழிப்பதற்காக இதைச் செய்தோம். இதுவெல்லாம் காலங்காலமாக செய்து வரும் வழக்கம்தானே” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT