ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 23-ல் கடலுக்குச் சென்ற அந்தோணி எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை கைப்பற்றி, அதில் இருந்த லிவிங்ஸ்டன், மிஷோ, மரியடென்ஸ்டைன், சிமியோன், ரேபர்டுகிளாபி, கெல்மன்ராஜ், சகாய சுபாஷ், ஜெபமாலை நிஜந்தன், கிளின்டன், நிலன், சந்தியா, பிரகாஷ் ஆகிய 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்துபணியின்போது கைது செய்தனர்.
12 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டுதல், அனுமதியின்றி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களின் காவலை 2-வது முறையாக மே 12 வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் இந்த இடைப்பட்ட நாட்களில் மீனவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு மீனவருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.2 கோடி பணம் செலுத்த வேண்டும் என்றும், பணம் செலுத்தி பிணை பெறும் மீனவர்கள் மீண்டும் மே 12 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர் மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்கள் சதீஸ், வேலாயுதம், ராஜாகனி, நிஷர்அலி ஆகிய 4 பேருக்கு ஏப்ரல் 21 வரை 2-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.