திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒத்தக்கடை, மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
மதுரை கிழக்குத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா. காளிதாசை ஆதரித்து, யா. ஒத்தக்கடையில் பிரச்சாரம் செய்த ஜி.கே. வாசன் பேசியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா ஆகிய கட்சிகளுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. நாங்கள் அமைத்துள்ள கூட்டணி மீதும், தலைவர்கள் மீதும் எந்தக் குறையும் கூற முடியாது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம்.
மதுரை கிழக்குத் தொகுதியில் பல குறைகள் உள்ளன. அதனைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல வேட்பாளரை எங்கள் கூட்டணி அமைத்துள்ளது. யானைமலை, சமணர் படுக்கை, அரிட்டாபட்டி மலையில் உள்ள சமணர் படுக்கை மலையை புராதனச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும்.
பெரியார் பாசனப் பகுதியை இருபோக விவசாயத்துக்கு மாற்ற, எங்களது கூட்டணி நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவை. தமிழக மக்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு, இந்தியாவில் தமிழ்நாட்டை முதல்நிலை மாநிலமாக மாற்ற எங்கள் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். எனவே அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.