நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு, பாதாள சாக்கடை பணிகளை முடிப்பதில் முறையான திட்டமிடல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள் 12 ஆண்டு களுக்கு மேலாகியும் இதுவரை நிறைவடையவில்லை. இப்பணிக் காக சாலையோரம் தோண்டப்படும் பள்ளங்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் மூடப்படுவதாலும், போக்குவரத்து மாற்றத்தாலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நாகர்கோவில் நகர பகுதிக்கு ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையில் கோடை காலத்தில் தண்ணீர் வற்றுவதால் குடிநீர் தட்டுப்பாடும் தொடர்ந்தது.
இதனால் புத்தன்அணை திட்டம் மூலம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மே மாதத்தில் குடிநீர் விநியோகம் நடைபெறும் எனவும் மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் கூறிவந்தனர். ஆனால், பணி முடிய மேலும் காலதாமதமாகும் சூழல் நிலவுகிறது.
தற்போது மாநகராட்சி நிர்வாகத் தின் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெற்று வந்தபோதும் தொய்வு நீடிக்கிறது.
குடிநீர் குழாய்கள் பதிக்கவும் பாதாள சாக்கடை திட்டப் பணி களுக்காகவும் அவ்வப்போது தோண்டப்படுவதால் நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகள், குறுக்கு சாலைகள் அனைத்தும் ஆபத்தான பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் விபத்து பகுதிகளாக சாலைகள் மாறி விட்டன. நாகர்கோவில் நீதிமன்ற சாலையோரம் தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நீதிமன்ற சாலையில் இருந்து லீ தெரு வழியாக மணிமேடை வரும் குறுக்குச் சாலையில் நேற்று குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் குழிதோண்டி சீரமைக்கும் பணி நடைபெற்றது. சீரமைப்பு பணி நடைபெறுவது குறித்து அச்சாலையில் தகவல் பலகையோ, தடுப்போ வைக்காததால் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அந்த இடம்வரைவாகனங்களில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுபோல் கோட்டாறு, செட்டிக்குளம் குறுக்குச் சாலையிலும் பல இடங்களில் சாலையோர பள்ளங்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கையை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.