தமிழகத்தில் தொடங்கிய தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவில்பட்டியில் வெறிச்சோடிக் கிடக்கும் தீப்பெட்டி தொழிற்சாலை. 
தமிழகம்

தமிழகத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி 2,530 தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தீப்பெட்டி மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் 2,530 தீப்பெட்டி ஆலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கின.

தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருட்களான அட்டை, பேப்பர், குளோரேட், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ் போன்றவை, கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளன. தீப்பெட்டியின் அடக்கச் செலவுஅதிகரித்த நிலையில், 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டலுக்கு ஏப்ரல்1-ம் தேதி முதல் ரூ.50 விலைஉயர்த்தப்படும் என, உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். இதற்குதீப்பெட்டி கொள்முதல் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

11 நாட்களுக்கு

இதனால், நேற்று (6-ம் தேதி) தொடங்கி, வரும் 17-ம் தேதிவரை 11 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்செய்வது என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிபட்டணம் ஆகிய இடங்களில் இயங்கிவரும் முழு மற்றும் பகுதி இயந்திரங்கள், கையால் செய்யப்படும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் என சுமார் 2,530 ஆலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை, நேற்று தொடங்கின. இதனால், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வந்த சுமார் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறியதாவது:

மூலப்பொருள் கொள்முதல்

மூலப்பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், நஷ்டத்தைதவிர்க்கவே உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதைத் தடுக்கும் வகையில்,தீப்பெட்டிக்கான மூலப்பொருட்களை சிட்கோ மூலம் தமிழக அரசு கொள்முதல் செய்து, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். சீனாவில் இருந்து கள்ளத்தனமாக இறக்குமதியாகி விற்பனையில் உள்ள லைட்டர்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT