தமிழகம்

திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கே.என்.நேரு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேரு, கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் கணேஷ்குமாரிடம் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறும்போது, “திமுகவுக்கு மக்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

கே.என்.நேருவுக்கு மாற்று வேட்பாளராக திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு கோட்டாட்சியர் அறையிலிருந்து வெளியே வந்த கே.என்.நேரு, அங்கிருந்த அலுவலரிடமிருந்து வேட்பாளர் உறுதிமொழியை வாங்கி வாசித்தார். அதில், “வாக்காளர்களை மதம், இனம், ஜாதி, வகுப்பு மற்றும் இதர வகைகளில் வாக்களிக்கத் தூண்டமாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்ததை வாசித்து முடித்த அவர், “பணம் தரமாட்டேன்” என்று உறுதிமொழியில் அச்சிடவில்லையே என்று கேட்டுவிட்டு வெளியே வந்தார்.

ஜோசப் ஜெரால்டு

திருச்சி மேற்குத் தொகுதியில் தேமுதிக- மநகூ- தமாகா கூட்டணி சார்பில் போட்டியிட தேமுதிகவைச் சேர்ந்த ஜோசப் ஜெரால்டு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கோட்டாட்சியர் கணேஷ்குமாரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஒய்.ஜமால் முகமது, தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் கணேஷ்குமாரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல, வயலூர் வாசன் நகரைச் சேர்ந்த பு.கமல்ராஜ், மேற்குத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வமதியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருச்சி கோட்டாட்சியர் கணேஷ்குமாரிடம் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்த திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு. (அடுத்த படம்) தேமுதிக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு மனு தாக்கல் செய்கிறார்.

SCROLL FOR NEXT