தமிழகம்

ஆசிரியர் பணியை பாதிக்கும் எமிஸை கைவிட வேண்டும்: தொடக்கப் பள்ளி ஆசிரியர் அமைப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை: ‘‘ஆசிரியர் பணிகளை பாதிக்கும் எமிஸை கைவிட வேண்டும்,’’ என தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ஜோசப் சேவியர் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய வேறுபாடு அதிகமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பள்ளி கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட தொடக்க கல்வித்துறையை பிரித்து, மீண்டும் தனித்து இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மாணவர்கள், சமூகவிரோதிகளால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அதை தடுக்க மருத்துவர்களுக்கு உள்ளதை போன்று ஆசிரியர்களுக்கும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

எமிஸ் பதிவேற்ற பணியால் ஆசிரியர்களின் பணி பாதிக்கப்படுகிறது. அப்பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.

கரோனா பரவலால் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கடந்த 2020 மார்ச் முதல் நிறுத்தி வைக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பி.லிட் முடித்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்றார்.

மாவட்டத் தலைவர் ராமராஜ், பொருளாளர் பாண்டியராஜன் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT