கரூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் துக்கு நேற்று முன்தினம் காலை ஒருவர் பையுடன் வந்துள்ளார். அங்கிருந்த போலீஸார் அவரது பையை சோதனையிட்டதில், அதில் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. அதை சோதித்துப் பார்த்ததில், அது விளையாட்டுத் துப்பாக்கி என்பது தெரியவந்தது.
அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த பத்திர எழுத்தர் வெங்கடேசன்(54) என்பது விசாரணையில் தெரியவந்தது. கரூர் நீதிமன்றம் செல்வதற்காக வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வெங்கடேசனை மிரட்டி, வாகனத்தில் எஸ்.பி. அலுவலகத் துக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர், எஸ்.பி. அலுவலக வாயிலில் அவரை இறக்கிவிட்ட துடன், ஒரு பையைக் கொடுத்து, “இந்தப் பையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இதை எஸ்.பி. அலுவலகத்தில் வைக்காவிட்டால், உன்னையும், எஸ்.பி.யையும் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியதாகவும் வெங்கடேசன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாட்ஸ்அப்பில் நேற்று முன்தினம் மாலை தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. பத்திர எழுத்தரிடம் விளையாட்டுத் துப்பாக்கி கொண்ட பையைக் கொடுத்தனுப்பியது யார் என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.