மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். திருவிழாவின் 8-ம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. அன்று முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்கியதாக ஐதீகம். நேற்று முன்தினம் திக்குவிஜயம் நடந்தது.
நேற்று திருக்கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக மேற் கொள்ளப்பபட்டிருந்தன. மதுரையே விழாக் கோலம் பூண்டிருந்தது.
நேற்று அதிகாலை 4 மணி முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தளும் முன் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசன வாகனத்தில் நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்தனர். திருமண விழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர். காலை 8 மணியளவில் அம்மனும், சுவாமியும் மணக்கோலத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் எழுந்தருளினர். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. மீனாட்சி, சுவாமியின் பிரதிநிதிகளாக சிவாச்சாரியார்கள் இருந்தனர். வைரத் தாலி சுவாமியிடம் 3 முறை ஆசி பெற்று மீனாட்சி அம்மனுக்கு காலை 8.52 மணிக்கு அணிவிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கரகோஷம் எழுப்பியும், பூக்களைத் தூவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பிரியாவிடைக்கும் மங்கலநாண் அணிவிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் மாலை மாற்றிக்கொண்டனர். அம்மனுக்கு புதிய நாண் அணிவிக்கப்பட்டதும் விழாவில் பங்கேற்ற பெண்களும் புதிய தாலி மாற்றிக்கொண்டனர்.
திருக்கல்யாணம் முடிந்த பின் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் அங்கிருந்து பழைய கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை வீதிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் 20 இடங்களில் எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. கல்யாண கோலத்தில் அம்மனைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர்.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கல்யாண விருந்து நடைபெற்றது. ஏராளமானோர் நேர்த்திக் கடனாக தாலிக்கயிறு, குங்குமம், பல்வேறு பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கினர். மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 2,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. நான்கு மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேர்கள் வலம் வரும். இதற்காக 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வரும் 22-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக இன்று இரவு மலையில் இருந்து மதுரைக்குப் புறப்படுகிறார்.