மதுரை சுற்றுச்சாலையில் ஏப். 27-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பேசும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக, மதுரை சுற்றுச் சாலைகள் பராமரிப்பு பணியில் நெடுஞ்சாலைத்துறை தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 24 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் பங்கேற்கும் பொதுக் கூட்டம், மதுரை சுற்றுச் சாலையில் ஏப். 27-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கடந்த 5 ஆண்டுகளாக மதுரைக்கு முதல்வர் ஜெயலலிதா வரும்போதெல்லாம் இந்த இடத்தில்தான் அதிமுகவினரின் கூட்டங்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து பெற்ற வெற்றிகளால், இந்த இடத்தை ராசியான இடமாக அதிமுகவினர் கருதுகின்றனர். அதனால், ஏப். 27-ம் தேதி நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தையும் இந்த இடத்திலேயே நடத்த தீர்மானித்தனர்.
ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்ட மேடை, பொதுமக்கள் அமரும் இடம், வாகன நிறுத்த பகுதி உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 27-ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் வரும் ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் மதுரை சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு வருகிறார். பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் வீதம், 24 தொகுதிகளையும் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பேரை திரட்ட அக்கட்சி நிர்வாகிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.