தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. அந்த கூட்டணியில் பிரதான கட்சிகளாக புதிய நீதிக் கட்சியும் இந்திய ஜனநாயகக் கட்சியும் இடம்பெற்றுள்ளன. 3 கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி உடன்பாடு எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த மாதம் வெளியானது. அதில், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக ப.பாஸ்கரன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதனை அடையாளம் காண்பதில் கூட்டணிக் கட்சிகளிடையே தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 7 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்கிறது. தி.மலை தொகுதிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை போட்டியிட விரும்பு கின்றன. ஆரணி தொகுதியையும் புதிய நீதிக் கட்சி கேட்கிறது.
பாஜகவுக்கு செங்கம், கலசப் பாக்கம், போளூர் தொகுதிகளில் வாக்குவங்கி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தி.மலை தொகுதியிலும் கணிசமான ஆதரவு உள்ளது. இந்த நிலையில் புதிய நீதிக் கட்சியின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஓரிரு நாட்களாக அழுத்தம் கொடுக்காமல் உள்ளனர். கூட்டணி குறித்து அவர் களது நிலை தெளிவானதும் இறுதி வடிவம் பெறும்.
ஆர்வம் குறையவில்லை
சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பாஜக தயாராகவே இருக்கிறது. வேட்பு மனுக்கள் பெறும்போது தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனால், பாஜகவினர் ஆர்வத்துடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் என்றும், தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்றதும் ஆர்வம் குறைந்தது என்பது தவறு. 8 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்.
தொகுதிக்கு ஒரு பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் 15 பேர் அடங்கிய குழு உள்ளது.
மேலும் 800 பூத் கமிட்டிகளுக்கு 5 முதல் 10 பேர் அடங்கிய குழு அமைத்துள்ளோம். வாக்குச் சாவடியில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களை சரி சமமாகப் பிரித்துக் கொடுத்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் மூலம் மக்களைச் சந்தித்து வருகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் பொதுக்கூட்டம் நடத்தவும், ஒரு தொகுதிக்கு 15 முதல் 20 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்துவதற்கும் தயாராகி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை எடுத்துரைத்து பிரச்சாரம் செய் கிறோம்” என்றனர்.