தமிழகம்

பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளி கட்ட இலவசமாய் இடம் கொடுத்தார் ஏழை விவசாயி

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு மாவட்டத்தில் அடிப்படை போக்குவரத்து வசதி இல்லாத கொங்காடை மலைக்கிராமத்தில் உள்ள பழங்குடியின குழந்தைகள் கல்வி பயில பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எழுத்தறிவில்லாத ஏழை விவசாயி ஒருவர் இலவசமாய் நிலம் வழங்க, நன்கொடையாளர்களால் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரி லிருந்து 60 கி.மீ தொலைவில் பர்கூர் மலைப்பகுதியின் கடைக்கோடியில் கொங்காடை கிராமம் உள்ளது. போக்குவரத்து வசதியற்ற இக்கிராமத்தில் ஊராளி எனப்படும் பழங்குடியின மக்கள் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாத நிலையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார் ஜீப் மூலமே இங்கு வசிப்பவர்கள், அனைத்து தேவைகளுக்கும் வெளி யிடங்களுக்கும் செல்லக்கூடிய நிலை உள்ளது. கரடுமுரடனான பாதை காரணமாக இப்பகுதியில் கல்வி, மருத்துவம் போன்ற அடிப் படை வசதிகள் ஏதுமின்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த பழங்குடியின மக்கள் வனப்பொருள் சேகாரம், விவசாய கூலிக்கு செல்லுதல் போன்றவற்றை தொழிலாக கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகளுடன் கரும்பு வெட்டு தல், செங்கல் ஆலைகளுக்கு வேலைக்கு செல்லுதல் போன்ற தொழில்களுக்கு சென்று விடுவர். வருடத்தின் பாதிநாட்கள் இப்படி யாக பிழைப்புதேடி சமவெளிப் பகுதிகளுக்கு சென்று விடுவதால், பள்ளிக்கு செல்லவேண்டிய வயதில் பல குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டனர்.

இந்நிலையில் 2010-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்ட சுடர் தொண்டு நிறுவனம், இக்கிராமத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்கியது. இதன் விளைவாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இக்கிராமத்தில் 2010-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சிறப்புப்பள்ளி ஒரு குடிசையில் தொடங்கியது. நாளுக்கு நாள் மாணவர்களின் வருகை அதிகரித்த நிலையில், ஒரு நிரந்தர கட்டிடத்தை கட்ட முடிவு செய்யப் பட்டது. பள்ளிக்கான இடத்தை தேடும்போது, இதே கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜடையன் என்பவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பத்து சென்ட் நிலத்தை பள்ளிக்காக நன்கொடையாக வழங்க முன்வந்தார்.

தேசிய குழந்தைத்தொழிலாளர் திட்டம் என்பது ஒரு தாற்காலிக திட்டம் என்பதால், இப்பள்ளிக் கட்டிடம் கட்ட அரசிடமிருந்து நிதியேதும் கோரமுடியாது. எனவே கொடையாளர்களிடம் உதவி கோரப்பட்டது. ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, பெங்களுருவைச்சேர்ந்த தொழிலதிபர் புவிக்குமார், ஈரோடு தொழிலதிபர் வி.என்.எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட சில கொடையாளர்களிடம் நிதி திரட்டி பள்ளிக்கட்டிட பணி நிறைவு பெற்றுள்ளது. இப்பள்ளிக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடக்கிறது.

தன்னிடம் உள்ள சிறிய நிலப்பரப்பில் பள்ளிக்கென இடம் வழக்கிய விவசாயி ஜடையனிடம் பேசியபோது, ‘எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எனது மகன்களும், மகள்களும் பள்ளிக் கூடத்தைக்கூட எட்டிப் பார்த்ததில்லை. அடுத்த தலைமுறையாவது படிக்கட்டுமே என்பதற்காக கட்டிடம் கட்ட இடம் கொடுத்தேன். பள்ளிக்கூடம் கோயில் போன்றது. இந்த பள்ளியால் எங்க குழந்தைகள் நல்லா படிச்சு மேலே வந்தால் போதும்’ என்றார்.

ஈரோடு மாவட்டம் கொங்காடை மலை கிராமத்தில் உள்ள குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பள்ளிக்காக புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் முன் மாணவர்கள். அடுத்தபடம்: பள்ளி கட்டிடம் கட்ட இலவசமாய் நிலம் வழங்கிய பழங்குடியின விவசாயி ஜடையன்.

குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய தொழிலாளர் குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் துவங்கப்படும் பள்ளிகளில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். பொதுவாக இங்கு இரண்டு ஆண்டு கல்வி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள முறைசார் பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். கொங்காடை கிராமத்தில் 75 மாணவர்கள் படித்து வந்த நிலையில், சமீபத்தில் அவர்கள் முறைப்படுத்தப்பட்ட பள்ளிக்கு 50 மாணவர்கள் மாற்றப்பட்டு, தற்போது 25 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT