ராமநாதபுரம்: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி 2019-ல் அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்றுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில் நடப்பு ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பு தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் என எய்ம்ஸ் தலைமை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி கடந்த மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 50 மாணவர்கள் சேர்க்கை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் 5-வது தளத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு ரூ.4 கோடி செலவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு நேற்று தொடங்கியது. தொடக்க நாள் நிகழ்ச்சியில் 35 மாணவ - மாணவியர், பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குநர் ஹனுமந்த ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ம்ஸ் மாணவர்களுக்காக இங்கு 8 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸில் இருந்து 6 பேராசிரியர்கள் இங்கு வந்து கற்பிப்பர். அதோடு மங்களகிரி எய்ம்ஸில் இருந்து ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் 6 மாதங்களில் தொடங்கப்படும். இந்த மருத்துவமனைக்கு 183 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பேராசிரியர்களைத் தேர்வு செய்வது தொடர்பான விளம்பரம் இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படும் என்றார்.